உப்புவெளி பண்ணை – உயிர்வாயு நிலையத்தை பார்வையிட ஆளுநர் விஜயம்

 

-கிண்ணியா நிருபர்-

கிழக்கு மாகாண சபைக்கு சொந்தமான திருகோணமலை உப்புவெளி பண்ணையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பாரியளவிலான உயிர்வாயு அலகு நிர்மாணப் பணிகளை பார்வையிடுவதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் நேற்று புதன்கிழமை மாலை அங்கு விஜயம் செய்தார்.

இதற்காக செலவிடப்பட்ட தொகை 32 மில்லியன் ரூபா. இது சுமார் 67 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பண்ணையில் மின்சாரம் தயாரிக்கும் திறன் உள்ளது.

அதுமட்டுமல்லாமல் அதிலிருந்து வெளிவரும் திரவ உரத்தை சந்தைக்கு விடுவதன் மூலம் பெருமளவு வருமானம் ஈட்ட முடியும்.

இதன் போது ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப்பட்ட சில போயர் வகை ஆடுகளைப் பார்க்கும் வாய்ப்பு ஆளுனர் மற்றும் குழுவினருக்கு கிடைத்தது.

இந்த பண்ணையானது கிழக்கு மாகாணத்தில் காலநிலைக்கு ஏற்ற வகையில் முதன்முறையாக இந்த ஆடுகளை கலப்பினப்படுத்தியமையும் விசேட அம்சமாகும்.

ஒரு கலப்பின ஆட்டின் எடை 70 கிலோவுக்கு அருகில் இருக்கும். இதன் மூலம் ஆடுகளை வளர்க்கும் விவசாயிகள் சிறந்த வருமானத்தைப் பெற முடியும் என மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்போது, மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க, மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி. முதுபண்டா, ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள பணிப்பாளர் டொக்டர் எம்.பாசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.