-யாழ் நிருபர்-
கடந்த வருடம் டிசம்பர் 4 ஆம் திகதி வடையில் கரப்பான் பூச்சி காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, யாழ்ப்பாணம் சிவன் கோவிலடியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம், யாழ் நகர் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால் பரிசோதிக்கப்பட்டது.
இதன்போது, பல்வேறு குறைபாடுகள் இனங்காணப்பட்டது, அத்துடன் குறித்த உணவகத்திற்கு வடை தயாரித்து வழங்கும் சமையற்கூடமும் இனங்காணப்பட்டது, பொது சுகாதார பரிசோதகரின் பரிசோதனையில் அங்கும் குறைபாடுகள் இனங்காணப்பட்டது.
இதனையடுத்து, தனித்தனியாக உணவகத்திற்கும், சமையற் கூடத்திற்கும் எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் டிசம்பர் 06 ஆம் திகதி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
- Advertisement -
இதனையடுத்து, உணவகத்தினையும் சமையற்கூடத்தினையும் வழக்கு நடவடிக்கைகள் முடிவுறுத்தப்படும் வரை சீல் வைத்து மூடுமாறு நீதிமன்றம் கட்டளையிட்டது.
இதனையடுத்து உணவகமும், சமையற்கூடமும் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் சீல் வைத்து மூடப்பட்டது. இந்நிலையில் இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் வழக்கு அழைக்கப்பட்ட போது எதிராளிகள் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து உணவகத்திற்கு 60,000 ரூபா தண்டமும், சமையற்கூடத்திற்கு 20,000 ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது.
கடையினை மீள திறப்பதற்கான அனுமதியினையும், நீதிமன்றம் வழங்கியது.
இதையடுத்து சுமார் 40 நாட்களாக சீல் வைத்து மூடப்பட்டிருந்த குறித்த உணவகமும், சமையற்கூடமும் நீதிமன்றின் கட்டளையினையடுத்து இன்று திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.
- Advertisement -