
நாட்டில் மோசமான மழை நிலைமை அதிகரிக்கும்
இலங்கையின் தென்கிழக்கில் வளிமண்டலத்தில் நிலவும் கொந்தளிப்பான நிலை அடுத்த 48 மணித்தியாலங்களில் மேலும் வளர்ச்சியடையக் கூடும் என்பதால், அடுத்த சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் தாக்கம் காரணமாக கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், மாத்தளை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இதேவேளை, 7 மாவட்டங்களுக்கு இன்று பிற்பகல் 3 மணி முதல் நாளை பிற்பகல் 3 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.