எனக்கு மாம்பழ செய்கையை தவிர வேறு வருமானம் இல்லை – முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

எனக்கு மாம்பழ செய்கையை தவிர வேறு வருமானம் இல்லை, நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 10 கோடி ரூபா இழப்பீட்டை செலுத்த எனக்கு வழியில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, இவ்வளவு பாரிய தொகையை நட்டஈடாக செலுத்தும் திறன் தன்னிடம் இல்லாததால், மக்களிடம் பணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளேன் என தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘இவ்வளவு தொகையை செலுத்துவதற்கு என்னிடம் பண பலம் இல்லாததால் மக்களிடம் இருந்து 10 கோடி ரூபாவை வசூலிப்பேன் என நம்புகின்றேன்.

என்னிடம் சொந்தமாக உந்துருளி கூட இல்லை. நிதியத்தை நிறுவுவதற்காக குழுவொன்றை அமைப்பேன். நாடு முழுவதிலும் இருந்து பணம் சேகரிக்க வேண்டும்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கத் தவறினால், நான் சிறைக்கு செல்ல நேரிடும்’ என அவர் தெரிவித்தார்.

அவரது சகோதரரான கோடீஸ்வர வர்த்தகர் டட்லி சிறிசேனவிடம் ஏன் உதவி கோர முடியவில்லை என வினவிய போது, நாங்கள் சகோதரர்கள் என்றாலும் டட்லி சிறிசேனவின் வர்த்தகத்துக்கும் தனக்கும் தொடர்பில்லை என அவர் தெரிவித்தார்.

மேலும், ‘எங்கள் குடும்பத்தில் நாங்கள் 11 பேர் இருக்கிறோம்.அப்பாவுக்கு ஐந்து ஏக்கர் நெல் வயல், மூன்று ஏக்கர் நிலம் இருந்தது.

அந்த ஐந்து ஏக்கர் நிலம் எனது சகோதரிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

மூன்று ஏக்கர் நிலத்தில் மாம்பழம் பயிரிட்டேன். எனக்கு மாம்பழ செய்கையை தவிர வேறு வருமான வழியில்லை என்று தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன 10 கோடி ரூபா இழப்பீட்டை செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.