
தனது உடலில் தீ மூட்டிக்கொண்டு மனைவியை கட்டியணைக்க முயன்ற கணவன்
பொலிஸ் நிலையத்தினுள் தனது உடலுக்கு தீ வைத்து மனைவியை கட்டியணைக்க முயன்ற நபரொருவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மிரிஹான தலைமை பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபரினால் தனது மனைவிக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்காக நேற்று சனிக்கிழமை வருகை தந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது சந்தேகநபர் லைட்டரை பற்றவைத்து தனது உடலுக்கு தீ வைத்துக்கொண்டு அருகில் இருந்த மனைவியை கட்டியணைக்க முயன்றுள்ளார்.
எனினும், மனைவி வெளியே ஓடி வந்து உயிர் தப்பியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், பொலிஸார் தீ வைத்துக்கொண்ட நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். .
அதன்போது அவரது உடையில் பெற்றோல் வாசனை வீசியதாகவும் 34 வயதான குறித்த சந்தேகநபர் போதைப்பொருள் வைத்திருந்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
