தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் சதி செய்கிறது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ

தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் சதி செய்கிறது, சதித் திட்டங்களால் தேர்தலை காலம் தாழ்த்தவும் இடமளிக்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலத்தில் சிறு சிறு குறைபாடுகள் இருந்தபோதிலும், பரந்த அர்த்தத்தில் ஒரு நல்ல சட்டம் எனவும், முறைமை மாற்றத்திற்கு இது முக்கியமானது எனவும், சில திருத்தங்கள் இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் அதனை மேற்கொள்ள முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நாட்களில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் செயன்முறை இடம் பெற்றுவருவதனால் இந்த சட்டம் மிகவும் முக்கியமானதாக இருந்தாலும், இதை செயல்படுத்தும் நேரத்தில் சில சிக்கல் உள்ளதாகவும், இதன் மூலம் குழப்ப நிலை நிலவுவதாகவும், இதனை நிறைவேற்றினால் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு இடையூறாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த வரைவின்படி, வேட்பாளர்கள் தங்கள் செலவுகள் குறித்த முறையான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அவ்வாறு சமர்ப்பிக்காவிடில் அது குற்றமாகும் எனவும், சமர்ப்பிக்காவிட்டால் மனுவைக் கூட சமர்ப்பிக்கலாம் எனவும்,  இது மிகவும் நல்ல ஷரத்து என்றாலும் 2023 மார்ச் தேர்தலில் இது சிக்கலை ஏற்படுத்தும் எனவும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த வரைவு ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், விதிமுறைகள் பிறப்பிக்கப்படும் எனவும், மார்ச் முதல் வாரத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு இது தடையாக இருக்கும் எனவும், இதன் ஊடாக தேர்தலை ஒத்திவைக்கும் சதித்திட்டத்தை அரசாங்கம் செயற்படுத்த முயற்சிக்கின்றது எனவும், இது மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் செயலாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தச் சதியில் பங்காளியாக வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் நீதி அமைச்சரிடம் தெரிவித்தார்.