Sri Lanka Tamil News Site

பசறை-பிட்டமாறுவ வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

- Advertisement -

-பதுளை நிருபர்-

பசறையிலிருந்து பிட்டமாறுவ செல்லும் வீதியில் மஹதோவ சந்தியில் வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மஹதோவையிலிருந்து லுணுகலை வரையான 7 கிலோ மீற்றர் வீதியை புணரமைத்து தருமாறு தெரிவித்து இன்று புதன்கிழமை காலை சுமார் 300 இற்கும் மேற்பட்ட மஹதோவ தோட்ட தொழிலாளர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த வீதியில் செல்லும் வாகனங்களை வழிமறித்து பதாதைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பிய வண்ணம் மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

- Advertisement -

மஹதோவையிலிருந்து லுணுகலை வரையான குறித்த 7 கிலோ மீற்றர் வீதி வழியாக அப்பகுதிகளை சேர்ந்த சுமார் 1000 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பயணிக்கிறார்கள் என்பதுடன் அப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிற்கும் குறித்த வீதி வழியாகவே மாணவர்கள் பயணிக்கின்றனர்.

இந்நிலையில் இவ்வீதியை புணரமைக்கும் பணிகளுக்காக அடிக்கல்லை, முன்னாள் ஊவா மாகாணசபை அமைச்சர் செந்தில் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க ஆகியோர் இணைந்து நாட்டி வைத்துள்ளனர்.

எனினும் குறித்த வீதி புணரமைப்பிற்கான வேலைகள் தொடங்கப்பட்டு வீதியை உடைத்த நிலையில் தற்போது வேலைகள் நிறுத்தப்பட்டு குறித்த வீதி கைவிடப்பட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த வீதியை புணரமைத்து தருமாறு கோரி இன்று இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

- Advertisement -