தமிழ் மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படுமென ஜனாதிபதி என்னிடம் உறுதியளித்தார் – டக்ளஸ் தேவானந்தா

-கிண்ணியா நிருபர்-

75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலை கோணேஸ்வரம் ஆலயத்தில் நாட்டுக்கும், ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசி வேண்டி இந்து சமய விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

பிரதம அதிதிகளாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரமாகவும் சமத்துவ உரிமைகளுடன் வாழும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும், தமிழ்பேசும் மக்கள் மற்றும் ஏனைய மக்களினுடைய அரசியல் உரிமைகளை பாதுகாத்து, அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் காணி விடயங்கள் குறித்து கவனம் செலுத்தி அவற்றை தீர்க்க வழிசமைக்கப்படும் என்று ஜனாதிபதி தம்மிடம் தெரிவித்ததுடன், குறித்த விடயத்தை மக்களுக்கு உறுதியாக எடுத்துரைக்குமாறும் அவர் குறிப்பிட்டதாக இதன் போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர். எம். பி.எஸ்.ரத்னாயக்க, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி. எச். என். ஜயவிக்ரம, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அனிருத்தனன், பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பி. தனேஸ்வரன், குச்சவெளி பிரதேச செயலாளர் கே. குணநாதன், ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.