புடவைக்கடையில் நூதனமாக திருடியவர்கள் கைது

கம்பஹா நகரிலுள்ள துணிக்கடை ஒன்றில் பெறுமதியான புடவைகளை திருடிய மூன்று பெண்களும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும் கடந்த 12ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக கம்பஹா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதி ஆகிய மூவரும் கம்பஹா, நீர்கொழும்பு, கடவத்தை, களுத்துறை, பாணந்துறை மற்றும் அவிசாவளை ஆகிய நகரங்களில் அமைந்துள்ள ஜவுளிக் கடைகளிலும் புடவைகளைத் திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மூன்று பெண்களில் தாய் மற்றும் மகள் மற்றும் அவர்களது பெண் உறவினர் மற்றும் முச்சக்கரவண்டி சாரதி ஆகியோர் இந்த திருட்டை புரிந்த குழுவினராவார்.

இம்மூன்று பெண்களும் ஜவுளி கடைக்கு சென்று, இருவர் புடவைகளை தெரிவு செய்து கொண்டிருந்த போது மற்றைய பெண் புடவைகளை தனது ஆடையில் மறைத்து வைத்து திருடியுள்ளார்.

கம்பஹா நகரில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் புடவைகளை காணவில்லை என அதன் உரிமையாளர் கம்பஹா பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கடையின் சி.சி.ரவி கமராவை ஆய்வு செய்த போது,  மூன்று பெண்களின் சந்தேகத்திற்கிடமான நடத்தை மற்றும் அவர்கள் முச்சக்கரவண்டியை பல தடவைகள் அணுகிய விதம் ஆகியவற்றை கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.