மட்டு.போதனா வைத்தியசாலையில் தோல் நோய்க்கு சிகிச்சை பெற சென்ற சிறுமி உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு தோல் நோய்க்கு சிகிச்சை பெற சென்ற சிறுமி ஒருவர் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு திராய்மடு பகுதியை சேர்ந்த முனியாண்டி சாந்தகுமார் சாந்தகுமார் கண்மனி ஆகியோரின் மகளான 17 வயதுடைய சாந்தகுமார் எப்சிகா என்ற சிறுமியே இவவாறு உயிரிழந்துள்ளார்.

குடும்பத்தில் உள்ள ஐந்து பிள்ளைகளில் மூன்றாவது பிள்ளையான குறித்த சிறுமி மட்டக்களப்பு நாவலடி நாமகள் வித்தியாலயத்தில் கல்வி கற்று கல்விப்பொது தராதர சாதாரண தர பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முதல் முகத்தில் தேமல் எனப்படும் தோல் நோய் ஏற்பட்டு அதன் காரணமாக மட்டு போதனா வைத்தியசாலைக்கு தனது சகோதரியுடன் சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.

அங்கு வழங்கப்பட்ட மாத்திரைகளை பாவித்து வரும் நிலையில் கடந்த புதன்கிழமை காய்ச்சலும் வாந்தியும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த சிறுமியின் தாய் அவரை மட்டு போதனா வைத்தியசாலைக்கு அழைச்சு சென்றுள்ளார்.

அப்போது வைத்தியசாலை விடுதியில் சிறுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கிய நிலையில் நேற்று வியாழக்கிழமை சிறுமி அதிதீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். அதன்பின் குறித்த சிறுமி இறந்துவிட்டதாக நேற்று மால 4 மணிக்கு பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று வியாழக்கிழமை அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மகளை பிற்பகல் 1 மணியளவில் தான் சென்று பார்த்தபோது மகளின் உடல் குளிர்ந்த நிலையில் இருந்ததாக உயிரிழந்த சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மட்டு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி கலாரஞ்சனியிடம் ஊடகவியலாளர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது எனக்கு இது தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

எனினும் தமது மகளுக்கு முறையான மருத்துவ பரிசோதனைகளோ அல்லது மருந்துகளோ வழங்கப்படவில்லை என உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்