-மஸ்கெலியா நிருபர்-
நுவரெலியாவில் டித்வா புயலால் கடுமையாக சேதமடைந்த பாலம் ஒன்று இன்று வரை புனரமைக்கப்படாமல் இருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அனர்த்தம் இடம்பெற்று ஆறு மாதங்களுக்கு மேலாகியும், நிரந்தர தீர்வு எதுவும் வழங்கப்படாமல் தற்காலிக மாற்றுப் பாதை ஒன்றை மட்டும் அமைத்து அதிகாரிகள் தங்கள் பொறுப்பை மறந்துவிட்டதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இந்த பாதை தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுவதால், பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
நுவரெலியா மாநகரசபை நகர அபிவிருத்தி குறித்து பெரிய பெரிய திட்டங்களைப் பேசுகிறது. ஆனால் மக்களின் அத்தியாவசிய தேவையான ஒரு பாலத்தையே ஆறு மாதங்களாக சீரமைக்க முடியாது உள்ளது.
மேலும், சுற்றுலா நகரமாக விளங்கும் நுவரெலியாவின் அடிப்படை கட்டமைப்புகள் கூட பராமரிக்கப்படாத நிலையில் இருப்பது, மாநகரசபையின் செயலற்ற தன்மையை வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நகரின் அழகுபடுத்தலுக்காக பணம் செலவிடப்படும் நிலையில், மக்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் புறக்கணிக்கப்படுவது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
உடனடியாக பாலத்தை புனரமைத்து பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிசெய்ய நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர், நுவரெலியா மாநகர சபை முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.