-அம்பாறை நிருபர்-
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், வீட்டு மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் குடும்பஸ்தரின் சடலத்தின் சில பாகங்கள், மேலதிக பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில், மலயர் வீதி, விளினியடி-1 பிரிவு பகுதியை சேர்ந்த, உதுமாலெப்பை இப்றாகீம் (வயது 45) என்பவர் உயிரிழந்தார்.
சடலத்தின் மீதான மரண விசாரணை, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
உயிரிழந்தவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து, மறுநாள் செவ்வாய்க்கிழமை அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக சடலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதன் போது, சட்ட வைத்திய அதிகாரி நிபுணரினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர், உயிரிழந்தவரின் சடலத்தின் சில அவயங்கள் கொழும்பில் உள்ள அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு மேலதிக பரிசோதனைக்கான அனுப்பி வைக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சடலம் இன்று வியாழக்கிழமை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.