அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன மௌலானா வீதியில், இன்று வியாழக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்ட விசேட அதிரடிச் சுற்றிவளைப்பின் போது, பெருமளவிலான போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சின்ன மௌலானா வீதியிலுள்ள வீடு ஒன்று முற்றுகையிடப்பட்டது.
இதன் போது 450 கிராம் கேரளா கஞ்சா மற்றும் 5,800 மில்லி கிராம் ஹெரோயினுடன் 37 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் எஸ். பகீரதனின் வழிகாட்டலில், எஸ்.ஐ. செயலாப்தீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்தச் சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.