அம்பாறை பொது வைத்தியசாலையில் வைத்து, நேற்று திங்கட்கிழமை அதிகாலை பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பி ஓடிய சந்தேக நபர், பொலிஸாரினால் சுடப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டு, அம்பாறை பொது வைத்தியசாலையில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சந்தேக நபர் அம்பாறை மாவட்டம் புறநகர் பகுதியான கொட்டவேஹெரா கிராமத்தில், சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அம்பாறை முகாம் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அம்பாறை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அம்பாறை தலைமையக பொலிஸார், சந்தேக நபரை நேற்று அம்பாறை வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக மருத்துவரிடம் அழைத்து சென்ற நிலையில், குறித்த சந்தேக நபர் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பி சென்றிருந்தார்.
தப்பி சென்ற சந்தேக நபரை பின்தொடர்ந்த பொலிஸார், சந்தேக நபரை கடும் சிரமத்தின் மத்தியில் மீண்டும் பிடித்து, கைது செய்தனர்.
சந்தேகநபர் பொலிஸாரின் கையில் இருந்த துப்பாக்கியைப் பறிக்க முயன்ற போது, சந்தேக நபரின் தொடைப் பகுதியில் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபரை கைது செய்த பொலிஸார், பின்னர் அம்பாறை பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமைய, அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்தலில், அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் 1 சம்பத் விக்ரமரத்னவின் மேற்பார்வையின் கீழ், அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.பி.கஸ்தூரி ஆராச்சி தலைமையில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.