மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட மட்டக்களப்பு நகர் பகுதியில், மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில், பிரபல உணவகம் ஒன்றை 14 நாட்களுக்கு மூடி சீல் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு நகரிலுள்ள குறித்த உணவகம் தொடர்பாக பொதுமக்கள் வழங்கிய முறைப்பாடுகளைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.முரளீஸ்வரனின் பணிப்புரைக்கு அமைவாகவும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ.உதயகுமாரின் வழிகாட்டலிலும், இந்த திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் மற்றும் மட்டக்களப்பு புளியந்தீவு பொது சுகாதார பரிசோதகர் ஜே. யசோதரன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் குறித்த உணவகத்தை பரிசோதனை செய்தபோது, அங்கு பாரிய சுகாதார சீர்கேடுகள் கண்டறியப்பட்டன.
- மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருட்களை விற்பனைக்காகக் களஞ்சியப்படுத்தியமை.
- உணவு உற்பத்தி செய்யும் இடத்தில் பூச்சிகள் மற்றும் கிருமிகள் தொற்று ஏற்படக்கூடிய சூழல் காணப்பட்டமை.
- உணவு கையாளும் மேற்பரப்புகள் தூய்மையின்றி நோய் பரவக்கூடிய நிலையில் இருந்தமை.
- திறந்த நிலையிலுள்ள மலசலக்கூடத்திற்கு மிக அருகாமையில் உணவு உற்பத்தி செய்யப்பட்டமை.
- திண்ம மற்றும் திரவக் கழிவுகளை அகற்றுவதற்கான முறையான கட்டமைப்பு இல்லாமை.

இந்தக் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி, மக்களின் சுகாதார நலனைக் கருத்திற்கொண்டு, குறித்த உணவக உரிமையாளரை அபராதமாக 50 ஆயிரம் ரூபா செலுத்துமாறும், உணவகத்தை தற்காலிகமாக 14 நாட்களுக்கு மூடி சீல் வைக்குமாறு கட்டளையிட்டார்.
பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதிக்கும் வகையில் செயற்படும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக, தொடர்ந்து கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, சுகாதாரத் துறையினர் இதன்போது எச்சரிக்கை விடுத்தனர்.
