-கொழும்பு-
யேமன் நாட்டின் ஹௌதி படைகளின் தாக்குதல்களில் இருந்து கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கு செங்கடலுக்கு கப்பலை அனுப்புவதற்கு தயாராயிருக்கும் இலங்கை கடற்படை அரசாங்கத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறது.
செங்கடலுக்கு கடற்படைக் கப்பலை அனுப்புவது தொடர்பில் உயர்மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. எந்த நேரத்திலும் அந்த பிராந்தியத்துக்கு செல்வதற்கு கடற்படை தயாராக இருக்கிறது என்று அதன் பேச்சாளர் காப்டன் கயான் விக்கிரமசிங்க கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்க இலங்கை கடற்படை கப்பல் ஒன்றை அனுப்பும் என்று ஜனவரி 3 ஆம் திகதி நிகழ்வொன்றில் பேசியபோது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டால் கப்பல் கட்டணங்களும் சரக்கு செலவுகளும் அதிகரிக்கும். அதனால் நாட்டின் இறக்குமதிச் செலவுகள் கடுமையாக அதிகரிக்கும். அதனால் செங்கடல் பிராந்தியத்தில் உறுதிப்பாட்டைப் பேணும் நடவடிக்கைகளுக்கு பங்களிப்பைச் செய்வதற்கு இலங்கை உறுதிபூண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.
கடற்படையின் கப்பல் ஒன்றை அனுப்பி செங்கடலில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்துவதற்கு இரு வாரகாலத்துக்கு அரசங்கத்துக்கு 25 கோடி ரூபா செலவாகும் என்பதையும் ஜனாதிபதி ஏற்கெனவே ஒத்துக்கொண்டார்.
ஜனாதிபதியின் அறிவிப்பைத் தொடர்ந்து செங்கடல் பணியில் கப்பலை ஈடுபடுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து கடற்படை ஆய்வொன்றைச் செய்தது. கப்பலை அனுப்புவதற்கு முன்னதாக தளபாட விநியோகங்களுக்கும் சக்திவாய்ந்த ஆயுதங்களுக்கும் ஏற்பாடுகளைச் செய்யவேண்டிய தேவை குறித்து கடற்படை வலியுறுத்தியது.
செங்கடல் பணி தொடர்பிலான தற்போதைய நிலைவரம் குறித்து கருத்து தெரிவித்த கடற்படைப் பேச்சாளர், ” பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்து திகதியும் நிர்ணயிக்கப்பட்டவுடன் கப்பல் ஒன்றை நாம் அனுப்புவோம். அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளுக்கும் கடற்படைத் தளபதிக்கும் இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததும் திகதி நிர்ணயிக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.
யேமனில் ஈரானின் உதவியுடன் இயங்கிவரும் ஹௌதி குழுவுக்கு எதிராக அமெரிக்காவும் பிரிட்டனும் விமானத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கின்றன.
காசா பள்ளத்தாக்கில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திவரும் கொடூரமான தாக்குதல்களை ஆட்சேபித்து செங்கடல் ஊடாக இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்கள் மீதும் இஸ்ரேலில் இருந்துவரும் கப்பல்கள் மீதும் ஹௌதி படைகள் தாக்குதல்களை நடத்திவருகின்றன.
செங்கடலில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சர்வதேசக் கூட்டணியின் ஒரு அங்கமாக ஆறு உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்புக் குழுவொன்றை அனுப்பப்போவதாக நியூசிலாந்து செவ்வாயன்று அறிவித்தது.
பாரதூரமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இந்த நேரத்தில் இரு வாரங்களுக்கு ஒரு தடவை 25 கோடி ரூபா செலவை ஏற்படுத்தும் ஒரு கடற்படை நடவடிக்கையில் இலங்கையைச் சம்பந்தப்படுத்தும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் தீர்மானம் உள்நாட்டில் கடுமையான கண்டனத்துக்குள்ளாகியிருக்கிறது.