-கொழும்பு-
தெற்காசிய பிராந்தியத்தின் அமைதியை மனதிற்கொண்டு இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும் இடையிலான பதற்றநிலையைத் தணிப்பதற்கு உதவ இலங்கை முன்வந்திருக்கிறது.
அணிசேரா நாடுகளின் உச்சிமகாநாட்டுக்காக உகண்டா நாட்டின் தலைநகர் கம்பாலாவுக்கு சென்றிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருடன் இன்று சனிக்கிழமை நடத்தவிருக்கும் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளின் போது இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும் இடையிலான பதற்றத்தை தணிக்கவேண்டியதன் அவசியம் குறித்து ஆராய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாலைதீவில் கடந்த வருட இறுதியில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று புதிய ஜனாதிபதியாக தெரிவான முகமட் முய்சு பதவியேற்றது முதல் இரு நாடுகளுக்கும் இடையில் உறவுகள் கசப்படையத் தொடங்கின.
ஜனாதிபதி முய்சு வெளிப்படையாகவே சீனாவுக்கு ஆதரவான கொள்கையைக் கொண்டவர். சீனாவுடன் சிறந்த உறவுகளை வளர்த்துக்கொள்வதில் நாட்டம் கொண்டிருக்கும் அவர் பதவியேற்ற கையோடு மாலைதீவில் இருக்கும் இந்தியப் படைகளை வெளியேறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இலங்கையின் ஜனாதிபதிகளைப் போன்றே மாலைதீவு ஜனாதிபதிகளும் பதவியேற்றதும் முதன்முதலான வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கே செல்வது வழக்கம்.
ஆனால் முய்சு அவ்வாறு செய்யவில்லை. முதல் உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயமாக அவர் துருக்கி சென்றார். பிறகு காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மகாநாட்டில் பங்கேற்க துபாய் சென்றார். அடுத்து கடந்த வாரம் சீனாவுக்கு விஜயம் செய்த அவருக்கு பெய்ஜிங்கில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அண்மையில் இந்தியாவுக்கு சொந்தமான லக்சதீவுக்கு சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்த தீவின் கடற்கரையோரங்களின் அழகை புகழ்ந்ததை அடுத்து மாலை தீவு அரசியல்வாதிகள் கடுமையான ஆத்திரம் அடைந்தார்கள்.
மாலைதீவுக்கு பிரதான வருமானத்தை ஈட்டிக்கொடுப்பது சுற்றுலாத்துறையாகும். மோடி லக்சதீவைப் புகழ்ந்தது தங்களது சுற்றுலாத்துறையைப் பாதிக்கும் என்று அஞ்சிய மாலைதீவின் மூன்று இணையமைச்சர்கள் ஜனவரி 4 சமூக ஊடகங்களில் அவரை கொச்சைப்படுத்திப் பதிவுகளைச் செய்தனர். இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்தது.
இணையமைச்சர்களை ஜனாதிபதி முய்சு பதவிநீக்கிய போதிலும் அதன் மூலமாக இந்தியா திருப்தியடையவில்லை. மாலைதீவுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் தவிர்க்கவேண்டும் என்று பெருவாரியான இந்தியர்கள் சமூக ஊடகங்களில் பதிவுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
உகண்டாவில் மாலைதீவு வெளியுறவு அமைச்சர் மூசா சமீரைச் சந்தித்த இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெற்காசியப் பிராந்தியத்தின் சகல நாடுகள் மத்தியிலும் அமைதி நிலவவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
இன்று ஜெய்சங்கருடன் இரு தரப்பு விவகாரங்கள் குறித்து பேசவிருக்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும் இடையிலான பதற்றநிலையை தணிக்கவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது