இலங்கைக்கு மெதடிஸ்த திருச்சபை வருகை தந்து 212 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு, மெதடிஸ்த மிஷனரிமார்களின் தியாக வாழ்வு, ஆன்மீகப் பணி மற்றும் சமூகப் பணிகள் குறித்த விசேட கண்காட்சி ஒன்று இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு வடக்கு கிழக்கு திருமாவட்ட சபையின் அங்கமாக, அனைத்து மெதடிஸ்த மற்றும் செங்கலடி பிராந்திய திருச்சபை மக்களும் இணைந்து இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர்.
கடந்த 212 வருடங்களாக மெதடிஸ்த திருச்சபை இலங்கையில் ஆற்றிய ஆன்மீக, கல்வி மற்றும் சமூகப் பணிகள் தொடர்பான அரிய புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஆரம்பகால மிஷனரிமார்கள் சந்தித்த சவால்கள், அவர்களின் தியாக வாழ்வு மற்றும் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு அவர்கள் வழங்கிய பங்களிப்புகள் இந்த கண்காட்சியில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
இன்று காலை ஆரம்பமான இக்கண்காட்சியினை பெருமளவிலான பொதுமக்களும் ஆன்மீகப் பெரியார்களும் ஆர்வத்துடன் வருகை தந்து பார்வையிட்டு வருகின்றனர்.
இலங்கையின் கல்வி, சமூக மேம்பாடு மற்றும் ஆன்மீக வரலாற்றில் மெதடிஸ்த திருச்சபையின் இருநூறு ஆண்டுகளைக் கடந்த இப்பயணம் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.