377 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜையொருவர் கைதாகியுள்ளார்.
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தின் ஊடாக சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் போதைப்பொருளைக் கடத்த முயன்ற வெளிநாட்டு பிரஜை ஒருவரே சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்கத் திணைக்களத்திடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி குறித்த இளைஞர் டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த 23 வயதுடையவர் என்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து சுமார் 37 கிலோகிராம் ஹஷீஷ் வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் சந்தைப் பெறுமதி சுமார் 377 மில்லியன் ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.