முச்சக்கரவண்டியொன்றில் 10 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ‘ஐஸ்’ போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற 38 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை கோனஹேன விசேட அதிரடிப்படையின் (STF) விசேட செயற்பாட்டு பிரிவிர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் உறுப்பினர்களுமான ‘பொடி சுரேஷ்’ மற்றும் ‘சங்க சமீர’ ஆகியோரின் இலங்கையிலுள்ள போதைப்பொருள் வலையமைப்பை இயக்கும் பிரதான உறுப்பினர் என தெரியவந்துள்ளது.
விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, நேற்று வெள்ளிக்கிழமை கடவத்தை, புனித அந்திரேயா அக்வில்லினோ தேவாலயத்திற்கு முன்பாக உள்ள வீதியில் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றது.
சந்தேகநபரிடமிருந்து 06 கிலோ 288 கிராம் ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருளை எடைபோடுவதற்கு பயன்படுத்தப்படும் மின்சார தராசு, கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கணேமுல்ல, கேந்தலியத்தபாலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவராவார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.