குளமாக மாறிய வீதி : கர்ப்பிணி பெண் விபத்து

-யாழ் நிருபர்-

 

786 வழித்தடப் பேருந்து பயணிக்கும் நவாலி – சங்கரத்தை வீதியானது மிகவும் மோசமடைந்த நிலையில் காணப்படுகிறது.

இந்த வழியால் பயணிக்கும் மக்கள் அன்றாடம் பல இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். அதிலும் துணவிச் சந்தியில் பாரிய பள்ளம் ஏற்பட்டு, மழை நீர் தேங்கியதால் அவ்வீதியால் பயணிப்பவர்கள் அன்றாடம் அச்சத்தினை எதிர்கொள்கின்றனர்.

இந்த வீதி தொடர்பில் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் இருந்தும் காரைநகரில் இருந்தும் புறப்படும் 786 வழித்தடப் பேருந்து இவ்வழியாலேயே பயணிக்கிறது.

இந்த வீதியானது மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது. ஆகையால் இந்த வழியால் பயணிக்கும் மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

நான்கு பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் இந்த வீதியாலேயே பயணம் செய்கின்றார்கள். மாற்றுவழி இல்லாததன் காரணமாக அவர்கள் இந்த வழியால் பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.

அத்துடன் வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணி பெண்கள், கல்வி நிலையங்களுக்கு செல்லும் மாணவர்கள், வேலைகளுக்கு செல்வோர் என அனைவரும் இந்த வீதியையே பயன்படுத்துகின்றனர்.

துணவிச் சந்தியில் நிலம் தெரியாத அளவில், கிட்டத்தட்ட இரண்டு அடி பள்ளம் காணப்படுகிறது. அந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இவ்வாறு பள்ளம் இருந்தால் மக்கள் எவ்வாறு பயணிப்பது?

ஒரு வாரத்திற்குள் சுமார் 4 அல்லது ஐந்திற்கும் மேற்பட்ட விபத்துகள் இந்த வீதியில் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக கர்ப்பிணி பெண் ஒருவரும் இதில் விபத்துக்குள்ளாகியுள்ளார். அன்று அந்த கர்ப்பிணிப் பெண் விபத்துக்கு உள்ளாகும்போது அவருக்கு ஏதாவது ஏற்பட்டிருந்தால் யார் அதற்கு பொறுப்பு கூறுவார்?

எனவே, மக்களாகிய எங்களது நிலலயை கருத்தில் கொண்டு இந்த வீதியை தற்காலிகமாக என்றாலும் செப்பனிட்டு தரவேண்டும். இல்லாவிட்டால் இந்த வீதியில் பாரிய விபத்துகள் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது,  என்றனர்.