மன்னாருக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி

 

-மன்னார் நிருபர்-

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராய்வதும் அந்தப் பிரச்சினைகளுக்கு வழங்கக் கூடிய தீர்வுகள் குறித்து கலந்துரையாடுவதுமே ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மன்னார் நகருக்கு சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முதலில் மன்னார் ஒல்லாந்து கோட்டையின் புனரமைப்பு பணிகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.

அதன் பின்னர், நடுக்குடா கடற்றொழிலாளர் கிராமத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, கடற்றொழிலாளர் சமூகத்தவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியதுடன், அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்.

நடுக்குடா கடற்றொழிலாளர் கிராம மக்கள் எதிர் நோக்கும் பல பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவு படுத்தப்பட்டதோடு, அது தொடர்பில் துரிதமாக ஆராய்ந்து தேவையான தீர்வுகள் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

மன்னார் காற்றாலை மின் நிலையம் நிர்மாணிக்கப்பட்டு வரும் பிரதேசத்தையும் ஜனாதிபதி அவதானித்ததுடன், காற்றாலை மின் நிலையத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் ஆராய்ந்ததுடன் அப்பகுதி மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி கேட்டறிந்துள்ளார்.

கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்சக்தி இவலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமேல் மற்றும் அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்