காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை -கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானையின் தாக்குதலினால் நபரொருவர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் காயமுற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோமரங்கடவல -புலிக்கண்டிகுளம் பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை வீட்டில் முற்றத்தில் யானை நின்றமையினால் அதனை துரத்துவதற்கு முற்பட்டபோது யானை தாக்கிய நிலையில் குறித்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் நான்கு பிள்ளைகளின் தந்தையான பக்மீகம -புளிக்கண்டி குளம் பகுதியைச் சேர்ந்த எம்.புஞ்சி பண்டா (74 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை நேற்று வெள்ளிக்கிழமை இரவு வயல் காவலுக்காக சென்ற டபிள்யூ. எம். எஸ். பண்டா (59வயது) யானையின் தாக்குதலினால் படுகாயம் அடைந்த நிலையில் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை மயிலவெவ பகுதியில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த என். சுமதிபால (65வயது) என்பவர் யானையின் தாக்குதலினால் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

தற்பொழுது யானை மின்வேலிகள் அமைத்திருந்த போதிலும் யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாகவும் இதனை கட்டுப்படுத்த கூடிய கவனம் எடுக்க வேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.