-மூதூர் நிருபர்-
திருகோணமலை – சேருவில பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு நேற்று வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரும் தலைமை தாங்கும் அதிகாரியுமான அஸ்மி ஆதம்லெப்பை தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது, சேருவில பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்காக நடாத்தப்பட்ட இரகசிய வாக்களிப்பில், தவிசாளர் வேட்பாளராக போட்டியிட்ட, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் எம். ஜி. ஜே. துஷார சம்பத் வெற்றி பெற்றுள்ளார்.
தவிசாளர் தெருவின் போது, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் எம். ஜி. ஜே. துஷார சம்ப மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் அசோக ஹேரத் திசாநாயக்க ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டன.
இதன் காரணமாக, தவிசாளரை வாக்களிப்பின் மூலம், தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக, பகிரங்க வாக்கடுப்பை சில கட்சிகளும், இரகசிய வாக்கெடுப்பை தேசிய மக்கள் சக்தியும் கோரின.
இந்த நிலையில், தவிசாளரை இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்வதா? அல்லது பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்வதா? என்பதை அறிந்து கொள்வதற்காக, உள்ளூராட்சி ஆணையாளரினால், இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில், மொத்தம் 16 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டது. இதில், 9 வாக்குகள் தவிசாளர் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என்றும், தவிசாளர் பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவாக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இந்த வாக்களிப்பில் பதிவு செய்யப்பட்ட 10 வாக்குகளில் 9 வாக்குகளைப் பெற்று, இவர் வெற்றி பெற்றார். ஒரு வாக்கு நிராகரிக்கப்பட்டிருந்தது.
16 உறுப்பினர்களைக் கொண்ட, இந்தப் பிரதேச சபையில், 6 உறுப்பினர்கள், வாக்களிப்பில் கலந்து கொள்ளாது, சபையை விட்டும் வெளியேறியிருந்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி,, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் , மக்கள் போராட்ட முன்னணி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களே பகிரங்க வாக்களிப்பை கோரி, இரகசிய வாக்களிப்பு முறையை பகிஷ்காரித்து, சபையை விட்டும் வெளிநடப்புச் செய்தனர்.
எனினும், இலங்கை தமிழரசுக் கட்சி, சர்வஜன அதிகாரம் மற்றும் பொதுசன ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 3 உறுப்பினர்களும் இரகசிய வாக்களிப்பில் கலந்து கொண்டனர்.
உதவி தவிசாளராக, சர்வஜன அதிகாரம் கட்சி உறுப்பினர் கே.கே. திமுத்து பிரியங்கர போட்டியின்றி ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்.