இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களில் சுமார் இருபது வீதமானோர் (20%) ஊட்டச்சத்து குறைபாட்டினால் (Malnutrition) பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து, பிள்ளைகளின் ஊட்டச்சத்து மட்டத்தை மேம்படுத்துவதற்காக சுகாதார அமைச்சும் கல்வி அமைச்சும் இணைந்து பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளுக்கான (School Canteens) புதிய வழிகாட்டல் கோவையை வெளியிட்டுள்ளன.
இந்த வழிகாட்டல் கோவைக்கு அமைவான விசேட சுற்றறிக்கை (Circular) அனைத்து மாகாண, வலயக் கல்வி அலுவலகங்களுக்கும் அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (பாடசாலை சுகாதார மற்றும் ஊட்டச்சத்து பிரிவு) பி. சுதர்ஷன பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதற்குரிய விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இந்தச் சுற்றறிக்கையின்படி, அரச மற்றும் அரை-அரசு பாடசாலைகளின் சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்ய தடைசெய்யப்பட்ட பல உணவுப் பட்டியல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் மக்கள் குறைந்த வயதிலேயே மரணமடையும் நிலை பதிவாகி வருவதாகவும், பிள்ளைகளை ஊட்டச்சத்து மிக்க மற்றும் தூய்மையான உணவுப் பழக்கவழக்கங்களுக்கு பழக்கப்படுத்துதல், தொற்றா நோய்களுக்கு (NCDs) ஆளாவதைக் குறைத்தல் உள்ளிட்ட 5 அடிப்படை நோக்கங்களின் கீழ் இந்த வழிகாட்டல் கோவை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
பிள்ளைகள் மற்றும் பெரியோர்களின் தற்போதைய உடல்நிலைத் தரவுகள்
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சின் ஊட்டச்சத்து பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் மோனிகா விஜேரத்ன இலங்கையிலுள்ள சிறுவர்களின் சுகாதார நிலை குறித்த அதிர்ச்சித் தரவுகளை வெளியிட்டார்:
5 வயதுக்குட்பட்ட சிறுவர்களில்: 10.1% பேர் குள்ளத்தன்மையுடனும் (Stunting), 8.6% பேர் மெலிவுத்தன்மையுடனும் (Wasting), 16.1% பேர் குறைந்த எடையுடனும் (Underweight) மற்றும் 0.57% பேர் அதிக எடை (Obesity) கொண்டவர்களாகவும் உள்ளனர்.
பெரியவர்களில்: இலங்கை பெண்களில் 47.6% பேரும், ஆண்களில் 30% பேரும் அதிக எடை கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்களில் 15% பெண்களும், 6% ஆண்களும் கடுமையான பருமன் (Severe Obesity) கொண்டவர்களாவர்.
தவறான உணவுப் பழக்கவழக்கங்களே இந்நிலைக்குக் காரணம் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், பாடசாலை மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை நச்சுத்தன்மையற்ற உணவுப் பழக்கவழக்கத்திற்குப் பழக்குவதற்காக நிபுணர் குழுவொன்றினால் இந்த வழிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் சுட்டிக்காட்டினார்.
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் தடைசெய்யப்பட்ட உணவுகள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து அதிபர் உள்ளிட்ட குழுவினரால் தொடர் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படும் என குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக மருத்துவ விசேட நிபுணர் புத்திகா சுதசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, பாடசாலைகளில் விற்பனை செய்யத் தடைசெய்யப்பட்ட உணவுகள் பின்வருமாறு:
இறைச்சி மற்றும் துரித உணவுகள்: சொசேஜஸ் (Sausages), மீட்போல்ஸ் (Meatballs), பேக்கன் (Bacon), சொசேஜ் பண், பர்கர் (Burger), ஹாட் டாக் (Hot dog), பீட்சா (Pizza), சப்மெரின் (Submarine).
பேக்கரி பண்டங்கள்: கிரீம் பண், ஜாம் பண், பேஸ்ட்ரி (Pastry), கேக் வகைகள், பிஸ்கட் வகைகள்.
செயற்கை சுவையூட்டிகள் மற்றும் சாஸ்கள்: செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட சில்லி பேஸ்ட் (Chilli Paste), சூப் கட்டிகள் (Soup cubes), சீசனிங் பவுடர் (Seasoning powder) சேர்க்கப்பட்ட உணவுகள், உடனடி (Instant) சூப் வகைகள், தக்காளி சாஸ் (Tomato sauce), சோயா சாஸ் (Soya sauce), உடனடி நூடுல்ஸ் வகைகள்.
இனிப்புகள் மற்றும் மிட்டாய்கள்: பாக்கெட் செய்யப்பட்ட மற்றும் டின் செய்யப்பட்ட ஊறுகாய் வகைகள், சுவிங்கம் (Chewing gum), டொபி (Toffee), லொசெஞ்சஸ், லொலிபொப் (Lollipop), தோசி, கிஸஸ் (Kisses), ஜுஜுப்ஸ் (Jujubes), பொம்பாய் மிட்டாய், புல்தோ.
குளிர்ச்சியான மற்றும் ஜெல்லி உணவுகள்: ஐஸ் பாக்கெட், ஐஸ் பழம், ஜெல்லி வகைகள், அதிக ஜெலட்டின் (Gelatin) அடங்கிய உணவுகள்.
எண்ணெயில் பொரித்த தின்பண்டங்கள் மற்றும் புடிங்குகள்: பூந்தி, மஸ்கற், பைட்ஸ் (Bites), முறுக்கு, சொக்லேட் வகைகள், அதிக சீனி கொண்ட புடிங் (Pudding) வகைகள்.
பானங்கள்: கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் (Soft drinks), சுவையூட்டிகள் மற்றும் நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட பானங்கள், யோகட் (Yoghurt), சக்திப் பானங்கள் (Energy drinks), உடனடி தேநீர் மற்றும் காப்பி வகைகள்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் விந்தியா குமாரபேலி மற்றும் குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்திம சிறிதுங்க ஆகியோரும் கருத்து வெளியிட்டிருந்தனர்.