பொருளாதாரத்தை மீட்டெடுத்து நாட்டில் உறுதிப்பாட்டை நிலைநிறுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இ்ன்னொரு வாய்ப்பைக் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பொருளாதார நெருக்கடியை தீர்த்துவைப்பதற்கு மிகவும் பொருத்தமானவர் தற்போதைய ஜனாதிபதியே என்று தெரிவித்துள்ளார்.
கம்பஹா மற்றும் மினுவாங்கொடை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பொன்றில் மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதி பதவிக்கு வேறு ஆட்களை தெரிவுசெய்து பரீட்சித்துப் பார்த்துக்கொண்டிருக்க இது நேரமல்ல என்றும் அத்தகைய எந்தவொரு முயற்சியும் நாட்டை மேலும் நெருக்கடிக்கள் மூழ்கடித்துவிடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு பலர் முன்வருகிறார்கள். பல்வேறு வகையானவர்கள் இருக்கிறார்கள். ஒரு கடையையோ அல்லது நிறுவனத்தையோ நிருவகிப்பதைப் போன்று நாட்டை நிருவகிக்க முடியாது. எவரும் தங்களால் முடியும் என்று பெருமையாகப் பேசலாம்.ஆனால் செய்துகாட்டமுடியாது.
பொருளாதார நெருக்கடியை தீர்த்துவைப்பத்து மக்கள் நேசமுடைய அரசாங்கம் ஒன்றை நிறுவுவதற்கு எமக்கு குறுகிய கால அவகாசமே இருக்கிறது.
அதனால் வேறு வேட்பாளர்களை பரீட்சித்துக்கொண்டிருக்க எமக்கு நேரமில்லை. பரீட்சைக்கு இது நேரமுமில்லை.
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதற்கு பொதுஜன பெரமுன தீர்மானிக்கவில்லை. பொதுஜன பெரமுன் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கவேண்டும் என்று தனிப்பட்டமுறையில் நான் நம்புகிறேன்.
தேசியப் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு கடந்த காலத்தில் மக்கள் ஜனாதிபதிகளைத் தெரிவுசெய்தார்கள்.போரை முடிவுக்கு கொண்டுவர மகிந்த ராஜபக்சவை 2005 ஆம் ஆண்டில் மக்கள் ஜனாதிபதியாக தெரிவுசெய்தார்கள். நல்லாட்சியை உறுதிசெய்ய 2015 ஆம் ஆண்டில் மக்கள் மைத்திரிபால சிறிசேனவை தெரிவுசெய்தார்கள்.
தேசிய பாதுகாப்பை உறுதிசெய்ய கோட்டாபய ராஜபக்சவை 2019 ஆம் ஆண்டில் தெரிவுசெய்தார்கள். அதனால் இன்று நாம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை தெரிவுசெய்யவேண்டிய தேவை இருக்கிறது என்று பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.