போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தில் வாங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5 கோடியே 70 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை, பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்ற உத்தரவின்படி பொலிஸார் முடக்கியுள்ளனர்.
பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு வெளியிட்ட தகவலின்படி, உஸ்வெட்டகெய்யாவ, புபுதுகம பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், 20 பேர்ச்சஸ் காணியில் சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான இருமாடி வீடொன்றையும், வத்தளை நுகாபே – குஞ்சவத்தை பகுதியில் 9.5 பேர்ச்சஸ் காணியில் 70 இலட்சம் ரூபா பெறுமதியான கடையுடன் கூடிய மற்றொரு வீட்டையும் நிர்மாணித்துள்ளார்.
இந்த இரண்டு சொத்துக்களும் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த வருமானத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த சொத்துக்களை விற்பனை செய்வதோ அல்லது வேறு யாருக்கும் மாற்றுவதோ தற்காலிகமாக தடை செய்யும் வகையில், அவற்றை ஏழு நாட்களுக்கு முடக்குமாறு வெலிசறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, சந்தேகநபரான பெண் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.