குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்த குழுவொன்றினால் தொழிலதிபர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பு 12, மெசஞ்சர் தெரு மற்றும் கண்டி ஆகிய இடங்களில் உள்ள பல கட்டுமானப் பொருள் விற்பனை நிலையங்களின் உரிமையாளரான குறித்த தொழிலதிபர் பெப்ரவரி 10ஆம் திகதி கிராண்ட்பாஸில் உள்ள தேவாலயமொன்றுக்கு அருகில் வைத்து கடத்தப்பட்டதாகவும், பின்னர் 7 மில்லியன் ரூபாய் கொடுக்கப்பட்ட பின் விடுவிக்கப்பட்டதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சி.ஐ.டி.யைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தம்மை வழி மறித்து, மூன்று பேர் இருந்த வேனில் ஏற்றிச் சென்றதாகவும், அந்த கும்பல் தனது கண்களை கட்டி ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று கத்தியை காட்டி மிரட்டி 10 மில்லியன் ரூபாய் கேட்டதாகவும், ஆனால் பின்னர் 7 மில்லியன் கொடுக்க தாம் இணங்கியதாகவும், அதன்பின் 7 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொண்ட பின்னர் தன்னை அவர்கள் தெமட்டகொட புகையிரத மைதானத்திற்கு அருகில் கொண்டு வந்து விட்டதாகவும் குறித்த தொழிலதிபர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
சந்தேக நபர்களின் அச்சுறுத்தல் காரணமாக பொலிஸாரின் உதவியை நாடுவதில் தாமதம் ஏற்பட்டதாக வர்த்தகர் தனது முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.