கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த வேன் ஒன்று, இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளாகியதில், சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு, மொடர்ன் எலக்ரிகல் வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளரான, நஜிமுதீன் நஷாட் (வயது 39) என்பவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.
இவர் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவராவார்.
கட்டுநாயக்க விமான நிலையம் சென்று, உறவினர் ஒருவரை வழியனுப்பிவிட்டு மீண்டும் மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை, இவ்விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேனின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக, வேன் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சாரதிக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த வேனை உயிரிழந்தவரின் உறவினரான இளைஞர் ஒருவரே செலுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரது இறுதிக்கிரியைகள் சம்மந்தமான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.