பல்வேறு அமைப்புகள் மற்றும் குழுக்களால் முன்மொழியப்படும், அரசாங்கத்தின் முறையான அங்கீகாரத்தைப் பெறாத எந்தவொரு திட்டமும் எந்தக் காரணம் கொண்டும் பாடசாலைகளுக்குள் செயற்பட அனுமதிக்கப்படக் கூடாது என்று பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் உள்ள வடமத்திய மாகாண சபை வளாகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற வடமத்திய மாகாண கல்வி அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக அரசாங்கம் என்ற ரீதியில் பாரிய அர்ப்பணிப்புகளைச் செய்து வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், மாணவர்களுக்கு எப்போதும் சிறந்தவற்றையே வழங்க வேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே கல்வி சார்ந்த அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வடமத்திய மாகாணத்தின் கல்வி அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இந்த கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டதுடன்,
தரம் 5 புலமைப்பரிசில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளின் இலக்குகளை அடைவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்.
மாகாண மற்றும் வலய மட்டத்தில் செயல்படுத்தப்படும் பாடம் சார்ந்த திட்டங்களின் தற்போதைய நிலவரங்கள்.
‘டிட்வா’ சூறாவளியினால் சேதமடைந்த பாடசாலைகளை புனரமைப்பது குறித்த விடயங்கள்
மாகாண கல்வி அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட கல்விச் செயற்பாடுகள், ஆசிரிய-மாணவர் நலன்புரி மற்றும் நிர்வாகப் பிரச்சினைகள் தீர்வு ஆகிய விடயங்கள் பிரதமரால் கவனம் செலுத்தப்பட்டது.
கல்வியின் தரம் என்பது வெறும் பரீட்சை முடிவுகளால் மாத்திரம் தீர்மானிக்கப்படுவதில்லை என சுட்டிக்காட்டிய பிரதமர், பாடத்திட்டங்களுடன் தொடர்புடைய ஏனைய செயற்பாடுகளிலும் போதிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் தனது உரையில் மேலும் குறிப்பிட்டார்.