ஜனவரியின் முதல் 15 நாட்களுக்குள் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துவிட்டது. இது இலங்கை மீது அதிகரிக்கும் உலக ஆர்வத்தை வெளிக்காட்டுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை கூறுகிறது.
அதிகாரசபையினால் இரு தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட விபரங்களின் பிரகாரம் இவ்வருடத்தின் முதல் 15 நாட்களுக்குள் இலங்கை 101, 362 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவேற்றிருக்கிறது.
2023ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் இதை ஒப்பிடும்போது 114 சதவீத அதிகரிப்பாக அமைந்திருக்கிறது. அந்த ஆண்டில் ஜனவரி முழுவதுமே 102, 545 சுற்றுலாப் பயணிகளே நாட்டுக்கு வந்தனர்.
இவ்வருடம் வாரத்தில் சுற்றுலாப் பயணிகளின் சராசரி வருகை 46 ஆயிரமாக இருக்கும் அதேவேளை, சராசரி தினவருகை 6,700 ஆக இருக்கிறது.
கடந்த ஒரு சில வருடங்கள் சவால்மிகுந்தவையாக இருந்த நிலையில் சுற்றுலா் பயணிகள் பெரும் எண்ணிக்கையில் தற்போது வருகை தருவது பரபரப்பூட்டுவதாக அமைந்திருக்கிறது.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு வருவாயிலும் அதிகரிப்பை ஏற்படுத்துகிறது. இந்த அதிகரித்த செயற்பாடு இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு பெரும் ஊகனகத்தைக் கொடுக்கிறது.
கொழும்பு ஹோட்டல்களில் குறைந்தபட்ச அறை வாடகை வீதம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்புக்கு ஊக்கம் தந்த காரணிகளில் ஒன்றாகும் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ ஊடகங்களுக்கு கூறினார்.