பாணந்துறையில் இன்று வியாழக்கிழமை (23) காலை துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் பஸ்ஸில் மோதி உயிரிழந்துள்ளார்.
பஸ் சாரதியின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இதில், இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும் பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை இராணுவ முகாமில் சிவில் ஊழியராக கடமையாற்றி வந்த 40 வயதான ருவான் பிரியங்கர என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வழமை போல் துவிச்சக்கரவண்டியில் வேலைக்குச் சென்ற அவர், பாணந்துறை குறுக்கு சந்தியில் செல்லும் போது, தொடுபொலையிருந்து பாணந்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று அவர் மீது மோதியுள்ளது.
இதன்போது துவிச்சக்கரவண்டியின் கைப்பிடி பஸ்ஸில் சிக்கிக் கொண்டு இழுத்துச் செல்லப்பட்டதால் அவர் உயிரிழந்துள்ளதாக நேரில் கண்டவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பாணந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.