காத்தான்குடி சிறுவனின் மரணம் விட்டுச் சென்ற பல தடயங்கள் : 3 மணித்தியாலங்கள் ஏன் காலதாமதம் ?

சுவிட்சர்லாந்திலிருந்து -ச.சந்திரபிரகாஷ்-

காத்தான்குடியைச் சேர்ந்த 13 வயது சிறுவனின் மரணம் தற்கொலையா? கொலையா? என்பதற்கு எழுதப்படும் வரை விடை கிடைக்கவில்லை.

இருந்தபோதிலும் இச்சிறுவன் தற்கொலை செய்து கொண்டான் என எடுத்துக் கொண்டால் தற்கொலைக்கான உலக புள்ளிவிபரங்களின் அடிப்படையில் வயதெல்லை 15 தொடக்கம் 24 ஆக சராசரியாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

இளம் குழந்தைகளிடையே, தற்கொலைகான முயற்சிகள் பெரும்பாலும் சோகம், குழப்பம், கோபம் அல்லது கவனிப்பாரற்ற தன்மை போன்ற உணர்வுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆய்வுகளின் அடிப்படையில் தற்கொலை என எடுத்துக் கொண்டால் , மேற்குறிப்பிட்ட ஏதோ ஒரு காரணி சிறுவனின் தற்கொலைக்கான தூண்டுதலாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.

இது கொலையாக இருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என பலருடைய கருத்துக்களின் அடிப்படையில் ஆராய்ந்தால் இந்த சந்தேகப் பார்வை நீண்டு கொண்டே செல்கின்றது.

சிறுவனின் குடும்ப பின்னணி என்ன.?

காத்தான்குடி கனீபா மௌலவி வீதியில் வசித்து வந்த இவர் நான்கு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்தவர். தந்தையார் சிறு சப்பாத்து தயாரிக்கும் பட்டறை ஒன்றை நடத்திவருகின்றார்.

மெத்தப்பள்ளி கலவன் பாடசாலையில் 7ஆம் தரம் வரை கல்வி கற்ற இவர் கல்வியில் அதிக நாட்டம் இல்லாத நிலையில் ,   பாடசாலை முடிந்த பின்னர்  அருகில் உள்ள பாடசாலை கல்வி மற்றும் மார்க்க கல்வியை போதிக்கும் “விஸ்மி” எனும் நிறுவனத்தில் பெற்றோரால் இணைக்கப்பட்டு அங்கு மார்க்க கல்வியை அதிக விருப்பத்தோடு கற்றார் என தெரியவருகின்றது.

இந்த நிலையில் இவருடைய நண்பர் ஒருவர் சாய்ந்தமருதில் உள்ள குறித்த மதுரஸாவில் இணைந்ததையடுத்து தானும் இவருடன்   இணைந்து மார்க்க கல்வியை தொடர விரும்பியுள்ளார்.

அருகில் இருந்தால் இவருடைய மார்க்க கல்வி பாதிப்படையும் என எண்ணிய பெற்றோர் 25 ஆயிரம் ரூபா முற்பணமும் மாதம் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி கடந்த ஒக்டோர் மாதம் நடுப்பகுதியில் மதுரஸாவில் இணைத்துள்ளனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்விற்காக வீட்டிக்கு வந்த சிறுவன் மார்க்க உடையில்தான் திருமண நிகழ்வில் கலந்து விட்டு, மனநிறைவோடுதான் மதுரஸாவிற்கு மீண்டும் திரும்பிச் சென்றுள்ளார்.

தொலைபேசியில் தெரிவிக்க விரும்பியது என்ன.?

மரணமடைவதற்கு சிலதினங்களுக்கு முன்னர் தாயாருடன் ஏதோ ஒன்றை கதைப்பதற்கு எடுத்த முயற்சி கைகூடவில்லை என தெரியவருகின்றது.

மீண்டும் குறித்த சிறுவனுடன் தாயார் கதைப்பதற்கு எடுத்த முயற்சிகளுக்கு மதுரஸா மௌலவி தடையாக இருந்துள்ளார். இத்தினங்களில் ஏதோ ஒரு விடயத்தை சிறுவன் தாயாரிடம் தெரிவிக்க முயற்சித்து இருக்க வேண்டும் என உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

சிறுவனுடன் மௌலவி பெற்றோரை கதைக்க அனுமதிக்காமைக்கான காரணம் முதல் சந்தேகமாக பார்க்கப்படுகின்றது.

மூன்று மணித்தியாளங்கள் ஏன் தாமதம்.?

சிறுவன் தூக்கில் தொங்கியதாக சாய்ந்தமருது பகுதியில் மாலை சுமார் 6.30 க்கும் 7.30 மணிக்கும் இடையில் கதை பரவத்தொடங்கிய நிலையில் மௌலவி இரவு சுமார் 9.30 மணியளவிலேயே ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது வரவும் என பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பெற்றோர் உட்பட நால்வர் ஆட்டோவில் சாய்ந்தமருது நோக்கி சென்று கொண்டிருக்கும் போது மருதமுனைப் பகுதியை அண்டிய நிலையில் மௌலவி பிள்ளையை அடித்து கொலை செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

பெற்றோருக்கு கிடைத்த முதல் தகவலே கொலை என்றுதான் , இதற்கு முன்னரே இப்பகுதி இளைஞர்கள் இது தற்கொலை அல்ல கொலைதான் என, தமது எதிர்ப்பினை மதுரஸா வளாகத்திற்குள் தெரிவித்து குழப்பங்களை விளைவித்தமை யாவரும் அறிந்ததே.

இதுஒருபுறமிருக்க சிறுவனின் பெற்றோர் மதுரஸாவிற்கு செல்வதற்கு முன்னரே மௌலவியின் சகோதரர் ஒருவர் ஏறாவூரில் இருந்து அங்கு சென்றுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற மறுகனமே மௌலவி பெற்றோருக்கு அறிவிக்காமல் ஏறாவூரில் இருந்து தனது சகோதரணை வரவழைத்தமைக்கான நோக்கம் என்ன? என்ற கேள்வி பெற்றோர் மற்றும் இரத்த உறவினர்கள் மத்தியில் இருந்து எழுந்துள்ள நிலையில் இது இரண்டாவது சந்தேகமாக பார்க்க வேண்டிய ஒன்றுதான்.

இந்த மூன்று மணித்தியால காலதாமதம் பெற்றோருக்கு அறிவிக்க  ஏன் எடுத்தது என்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினரை விசாரணை செய்தால் மட்டுமே தெரியவரும்.

தூக்குப் போடும் இடமாக கழிவரை இல்லை, உயரமான பொருள் எங்கே.?

27 மாணவர்களுக்கு 2 கழிவறைகள் என சுமார் 7 அடி உயரமான கீழ்தரையில் இருந்த இந்த கழிவறையின் சுவரின் பின்பகுதியில் இருந்த பூக்கல்லில் எப்படி தூக்கிட்டு தற்கொலை செய்ய முடியும் என்ற கேள்வி உறவினர்கள் மத்தியில் இருந்து எழுந்துள்ளது.

பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவனை சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் இருக்கவில்லை. இதற்கு முன்பே சடலம் குறித்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

கழிவறையில் சிறுவன் தூக்கு போடுவதற்கான உயரமான பொருட்கள் எதுவும் இல்லாத நிலையில் இதற்குள் ஒரு வாளி தண்ணீர் நிரப்பிய நிலையில் மட்டுமே இருந்துள்ளது. எனவே வாளியை பயன்படுத்தி இருக்க முடியாது. அப்படியானால் சிறுவன் பயன்படுத்திய உயரமான பொருள் என்ன? அது எங்கே.?

சிறுவன் தான் அணிந்திருந்த தலைப்பாகையை கொண்டுதான் தூக்கிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் , குறுகிய நீளம் கொண்ட துணியைக் கொண்டு பூக்கல்லின்  உதவியோடு இந்த காரியத்தை செய்து இருக்கலாமா என்ற கேள்வி மூன்றாவது சந்தேகமாக உள்ளது.

மௌலவி தொடர்பான பார்வை.?

குறித்த மௌலவி மார்க்க கல்வியை கற்பிப்பதற்கான பூரணத்துவத்தை பெறவில்லை எனவும், குறித்த மதுரஸா சரியான சட்ட விதிமுறை பின்பற்றி நடக்கவில்லை எனவும் இப்பகுதி பள்ளிவாயல் தலைவர்கள் தற்போது குரல் எழுப்பி வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க குறித்த மௌலவிக்கு எதிராக பல முறைப்பாடுகள் உள்ளதாகவும், ஏற்கனவே இது குறித்து பொலிஸில்  பல முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு இவருடைய அழுத்தம் மற்றும் வேண்டுகோளின் பேரில் வாபஸ் பெறப்பட்டதாக இப்பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் தனது முகநூலில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக நான் குறித்த சட்டத்தரணியுடன் தொடர்பை ஏற்படுத்திய போது  இது உண்மையான சம்பவம் என உறுதியாக தெரிவித்தார்.

மேலும் மௌலவியின் கண்டிப்பு காரணமாக சில சிறார்கள் மார்க்க கல்வியை இடைநிறுத்தியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை இதுதான் காரணம் என உறுதிப்படுத்த முடியவில்லை.

பிரேத பரிசோதனை அறிக்கையில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது.?

கழுத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக குரல்வளை அல்லது சுவாசக்குழாய் உடைந்து மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் , இந்த அழுத்தம் தூக்கால் ஏற்பட்டதா? அல்லது வேறு காரணிகளால் ஏற்பட்டதா? என்பது பொலிஸ் புலன் விசாரணைகள் மூலம்தான் தெரியவரும்.

இந்தநிலையில் குறித்த சிறுவன் மார்க்க செயற்பாட்டிற்கு மாறாக நின்றுகொண்டு சிறுநீர் கழித்ததால் மௌலவியால் தண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணையின் போது மௌலவி தடுமாற்றத்துடன் பதில் வழங்கியுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் புலன் விசாரணைகள் தொடர்கின்றன.?

மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதான மௌலவியை 21 ஆம் திகதி வரை  விளக்கமறியலில்  வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

விசேட மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் அம்பாறையில் இருந்து வருகை தந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் மும்முனைகளில் இடம்பெறுகின்றன.

இவர் மௌலவியா, ஹாபிலா .?

கல்முனைக்குடியைச் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 2003 ஆம் ஆண்டு சாய்ந்தமருது பகுதிக்கு வந்து பொதுமக்களிடம்  பணம் வசூல் செய்து தனிப்பட்ட ரீதியில் இந்த மதுரஸாவை நிறுவியுள்ளார்.

சந்தேக நபரான மௌலவி மீராஸாகீபு முகமட் சனாஸ் (வயது-41) என்பவர் 2 பிள்ளைகளின் தந்தையாவார். இவர் ஏறாவூர் பகுதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்திருந்தார்.

இவர் மார்க்க கல்வியை கற்பிப்பதற்கு பூரணத்துவம் பெற்றவர் அல்ல எனவும் , ஹாபில் தரத்தை உடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது , சாய்ந்தமருது ஜமீயத்துல்லா உலாமா சபையிலும் கூட அங்கத்துவம் இல்லாதவர்.

இவர் இறுதியாக மௌலவி பட்டம் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை. உலாமா சபையில் மௌலவிமார் மட்டுமே அங்கத்துவம் பெறமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவரிடம் சுமார் 4மணித்தியாலங்கள் பெறப்பட்ட வாக்குமூலங்களின் போது முன்னுக்கு பின்னாக தகவல் வழங்கிய நிலையிலும் , அடிக்கடி சலம் மலம் கழிக்க சென்றமையை அடுத்து மௌலவி இறுதியாக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் அழைத்து செல்லப்பட்டு அங்கு உடற்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சட்டத்தரணிகள் எவரும் ஆஜராக வில்லை

சந்தேக நபராக மௌலவியின் சார்பாக எந்தவொரு சட்டத்தரணிகளும் முன்னிலையாகவில்லை.இருந்த போதிலும் அதற்கான முயற்சிகளை மௌலவியின் சகோதரர் மேற்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

காணாமல் போன சிசிடிவி சேமிப்பகம் மீட்பு.? 

சந்தேக நபரான மௌலவியின் வாக்குமூலங்களை பெற்ற பொலிஸார் சிசிடிவி கமராக்களை பொருத்தியவர்களின் தொடர்பாக  பொலிஸ் குழு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அட்டாளைச்சேனையில் மறைந்திருந்த சிசிடிவி கமரா  பொருத்திய நபர் மற்றும் அவரது உதவியாளர்கள் 3 பேரை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன் போது தனித்தனியாக அவர்கள் ஒவ்வொருவரிடமும் வாக்குமூலங்களை பெற்ற பொலிஸார் காணாமல் சென்ற  முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்ட நிலையில் வன்பொருள் சேமிப்பகத்தை கைப்பற்றி  நீதிமன்ற சான்று பொருளாக மன்றில் ஒப்படைத்ததுடன்,  அரச பகுப்பாய்விற்காக அழிக்கப்பட்ட காணொளிகளை மீளவும் பெற்றுக்கொள்வதற்கு மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிறுவனின் மரணம்  விட்டுச் சென்ற தடயங்கள் பலவுள்ள நிலையில் இவை சரியான முறையில் பகுப்பாய்வு செய்யப்படும் பட்சத்தில்  இது தற்கொலையா? அல்லது கொலையா? என்பது தொடர்பாக கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்கும்.

பொலிஸ் விசாரணைகள் முழுமையாக நிறைவடைந்து நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்படும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மௌலவி சந்தேக நபர்தான் இதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. இவர் தரப்பில் குற்றம் இழைக்கப்பட்டதா  (கொலையா )அல்லது இது தற்கொலையா என்பதை தொடர் விசாரணைகள் மூலமே தெரியவரும்அது வரை எமது தேடல் தொடரும்…

குறிப்பு:- இதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் ஏதாவது தவறுகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை எமது செய்தி பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு வரும்பட்சத்தில் மாற்றங்கள் செய்யப்படும் . minnalnews4@gmail.com