கல்முனையில் மிகச்சிறப்பாக இடம்பெற்ற பொங்கல்விழா
- Advertisement -
அம்பாறை மாவட்டத்தின் பிரதான தைப்பொங்கல் திருவிழா 2022 கல்முனை தமிழ் இளைஞர் சேனை அமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை பழைய பஸ் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
இளைஞர் சேனை அமைப்பின் தலைவர் எம்.சங்கீத் தலைமையில் கல்முனை வடக்கு பிரதேச செயலக அணுசரனையுடன் இன்று திங்கட்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கையின் தேசியக் கொடி, தமிழ் இளைஞர் சேனை அமைப்பின் கொடி, நந்திக்கொடி ,என்பன அதிதிகளால் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இதன் போது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.எம்.ஏ.டக்ளஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பொங்கல் பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் விழாவை ஆரம்பித்து வைத்தார். மேலும் கௌரவ அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் வே . ஜெகதீசன் , கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே . அதிசயராஜ், கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.எல்.புத்திக்க, கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீர் , வைத்தியர் புஷ்பலதா லோகநாதன் ,அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் கே.ஜெயராஜ், கல்முனை வடக்கு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.வசந்தி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் தமிழர் பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டதுடன் கல்முனை உவெஸ்லி உயர்தர மாணவர்களின் நடனம் விழாவிற்கு அழகு சேர்த்திருந்தது.
- Advertisement -
மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.எம்.ஏ.டக்ளஸ் அங்கு உரையாற்றும் போது இந்து மக்கள் மாத்திரமல்லாது மாவட்டத்தின் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடும் விழாவாக தைப்பொங்கல் விழா காணப்படுகின்றது. மதங்கள் இனங்கள் வேறாக இருந்தாலும் நாட்டை கட்டியெழுப்ப நாம் எல்லோரும் ஒரே மக்களாக செயற்பட வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த என்னை பிரதம அதிதியாக அழைத்து இப்படியான ஒரு கௌரவத்தை வழங்கிய இன்றைய நாளை என்னால் மறக்க முடியாது எனத் தெரிவித்தார்.
வருடா வருடம் கல்முனை பிரதான நகரம் தைப்பொங்கல் தினத்தன்று அலங்கரிக்கப்பட்டு தமிழர்களின் பாரம்பரிய கலாசார பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறுவதுண்டு. மாட்டு வண்டிகள் ஊர்வலமாக சென்று தைப்பொங்கல் திருவிழா இளைஞர்களால் கொண்டாடப்பட்டு வருவது வழமையாகும்.
மேலதிக புகைப்படங்களை எமது முகநூலில் பார்வையிடவும்
https://www.facebook.com/Minnal24News
- Advertisement -