மருதமுனை வீதி புனரமைப்பு

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட மருதமுனை பிரதான நகரத்தை இணைக்கின்ற நவியான் குளப்பகுதியின் ஊடறுத்து செல்கின்ற வீதி தற்போது துரிதமாக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.

நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமல் குறித்த வீதியினால் அப்பகுதியில் வாழும் சுமார் 80 குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை  முதற்கட்ட பணிகள் நிறைவுறும் நிலையில் காணப்படுவதுடன் மக்களும் இலகுவாக தங்களது போக்குவரத்துக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்குறித்த இவ்வீதியின் புனரமைப்பு வேலைத்திட்டங்களை அப்பகுதியில் வசிக்கின்ற பெண்கள் சிலர் சுயாதீனமாக இணைந்து ஒரு அமைப்பு ஒன்றினை உருவாக்கி வீதியின் புனரமைப்பிற்காக அப்பகுதி தனவந்தர்கள் வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றிடம் நிதிகளை சேகரித்து இந்நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

மேலும் குறித்த வீதியின் புனரமைப்பினை இலகுபடுத்தும் நோக்குடன் கனரக வாகனம் உழவு இயந்திரங்களின் உதவி தனியாரிடம் இருந்து நாள் வாடகை அடிப்படையில் பெற்று செப்பனிடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இச்செயற்பாட்டை ஊக்கப்படுத்தும் முயற்சியில் குறித்த வீதிக்கான புனரமைப்பிற்கு தனது தனிப்பட்ட நிதிப்பங்களிப்பினையும் வழங்கி கல்முனை மாநகர சபை உறுப்பினரும் பிரபல தொழிலதிபருமான எம்.எஸ்.எம் நவாஸ் ஒருங்கிணைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.

மருதமுனை பிரதேசத்தில் சுனாமி அனர்த்தத்தினால் வீடு வாசல்களை இழந்து பாதிக்கப்பட்ட சுமார் 80 குடும்பங்களுக்காக இவ்வீதி துரிதமாக புனரமைக்கப்பட்டு வருவதுடன் நீண்ட காலமாக மழை வெள்ளத்தினால் வெகுவாக பாதிக்கப்பட்டு பள்ளம் படுகுழிகளுடன் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது.

இன்று இவ்வீதியை புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டத்தை குறுகிய காலத்திற்குள் நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பெண்கள் அமைப்பு மற்றும் மாநகர சபை உறுப்பினருக்கு பொதுமக்கள் இதன்போது நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொண்டனர்.