சீரற்ற காலநிலையால் யாழில் 1025 பேர் பாதிப்பு

யாழ். மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 24 மணித்தியாலத்தில் 305 குடும்பங்களை சேர்ந்த1025 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு வீடானது பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக, யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

கரவெட்டி, யாழ்ப்பாணம், பருத்தித்துறை, மருதங்கணி மற்றும் சாவச்சேரி பிரதேச செயலர் பிரிவுகளில் பாதிப்புகள் கூடுதலாக ஏற்பட்டுள்ளது.

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் கூடுதலான பாதிப்பாக 201 குடும்பங்களைச் சேர்ந்த 691 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பொலிகண்டி பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெயர்ந்த 14 குடும்பங்களை சேர்ந்த 46 பேர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றார்கள்.

மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 72 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 54 குடும்பங்களை சேர்ந்த 171 பேரும், வெள்ளம் காரணமாக பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குரிய சமைத்த உணவு மற்றும் தங்குமிடவசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.