பிரபல இந்திய நடிகையும் திரைப்படத் தயாரிப்பாளருமான குஷ்பு சுந்தர், சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி கணேசநாதன் கதீஸ்வரனை சந்தித்து, இலங்கையின் வரலாறு மற்றும் கலாசாரத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
சென்னையில் அமைந்துள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகரகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்னி சினிமாக்ஸ் (பி) லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான குஷ்பு சுந்தர், “மஹாராணிஸ் – டின்சல் குயின்ஸ்” (Maharanis – Tinsel Queens) என்ற திரைப்படத் திட்டம் குறித்து இதன்போது விளக்கமளித்துள்ளார்.
இத்திரைப்படத்தின் மூலம் இலங்கையின் வளமான கலாசார பாரம்பரியம், வரலாற்று மரபு மற்றும் நாட்டின் இயற்கை எழிலை சர்வதேச பார்வையாளர்களுக்கு சினிமா ஊடாக எடுத்துச் செல்லும் நோக்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இலங்கையின் வரலாறு மற்றும் கலாசாரத்தை உலகளவில் விளம்பரப்படுத்துவதில் இந்தத் திரைப்படம் வழங்கக்கூடிய பங்களிப்பு குறித்து இருதரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
அத்துடன், திரைப்படப் படப்பிடிப்புக்கான கவர்ச்சிகரமான இடமாகவும், கலாசார சுற்றுலாவை மேம்படுத்தக்கூடிய நாடாகவும் இலங்கையை முன்னிறுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.