பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன், தனியார் பேருந்து மோதியதில், லொறியின் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக, பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியான தலைமை ஆய்வாளர் நுவன் மதுசங்க தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை காலை சுமார் 10 மணியளவில், ஆழ்துளைக் கிணறுகளைச் சரிசெய்யும் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்தது.
அப்போது, குறித்த லொறியில் பயணித்த தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், லொறியிலிருந்து இறங்கி லொறியின் அருகே நின்று கொண்டிருந்தார்.
பொகவந்தலாவ பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணிக்கத் தயாராக இருந்த தனியார் பேருந்தை இயக்கச் செய்துவிட்டு, அதன் சாரதி கீழே இறங்கியுள்ளார்.
பேருந்து திடீரென நகர்ந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் மீது மோதியதில், லொறியின் அருகில் நின்றிருந்த தொழில்நுட்ப வல்லுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், பொகவந்தலாவையைச் சேர்ந்த புஷ்பகுமார சிந்துஜன் (வயது 27) என பொலிஸார் தெரிவித்தனர் .
சந்தேகத்தின் பேரில் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக, விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.