அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை புறநகர் பகுதியான வீரமுனை 03 பகுதியில், நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, 33 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் 40 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.ரிபாய்டீன் தலைமையிலான குழு, சந்தேகநபரின் வீட்டில் விற்பனைக்காக 22 போத்தல்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பினை மீட்டுள்ளனர்.
இதேவேளை, மலையடி கிராமம் பகுதியைச் சேர்ந்த, 25 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஒருவர், 10 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தவிர, கேரளா கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த, மருதமுனை பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனைக்கமைய, பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.