இன்றைய போட்டியும் இரத்தானால் இந்திய அணியின் நிலை?

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரத்து செய்யப்பட்ட நிலையில் மேலதிக நாளான இன்று போட்டி தொடரவுள்ளது.

இன்றும் மழையால் ஆட்டம் இரத்து செய்யப்பட்டால் இந்தியா அணிக்கு சிக்கல் ஏற்படும் நிலை காணப்படுகிறது.

ஆசிய கிண்ண தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், மற்றும் பங்களாதேஸ் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி, கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது

இதன்படி இந்திய அணி 24.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால், போட்டி இன்றைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், போட்டி மழையால் நின்ற இடத்தில் இருந்து இன்று பகல் 3 மணிக்கு தொடங்கவிருந்தது. இந்த சூழலில், இன்று காலை முதல் கொழும்பில் மழை பெய்து வருகிறது.

எனவே, திட்டமிட்டபடி இரு அணிகளும் 50 ஓவர்கள் விளையாட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று போட்டி நிறுத்தப்பட்ட 24.1 ஓவரில் இருந்து ஆட்டம் மீண்டும் தொடங்கும்.

இந்த ஆட்டம் இரு தரப்புக்கும் இடையிலான 50-50 ஓவர் போட்டியாக இருக்கும். இன்றைய போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளும் தலா 1 புள்ளிகளை பகிர்ந்து கொள்ளும்.

இவ்வாறு 1 புள்ளியை இந்திய அணி பகிர்ந்து கொண்டால் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவதில் கூடுதல் சவாலை எதிர்கொள்ள நேரிடும்.

ஏனென்றால் ஏற்கனவே நடந்து முடிந்த போட்டிகளில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெற்றி பெற்று தலா 2 புள்ளிகளை பெற்றுள்ளன.

போட்டி இரத்தனால் பாகிஸ்தான் 2 போட்டிகளில் விளையாடி 3 புள்ளிகளைப் பெறும். இதனால் நாளை இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழல் ஏற்படும்.