பொரளை மற்றும் பாணந்துறை பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் உடற்பாகங்களையும் அவற்றால் தயாரிக்கப்பட்ட ஆபரணங்களையும் சட்டவிரோதமாக வைத்திருந்து விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட எட்டு கிண்ணங்கள், யானை முத்துகளால் செய்யப்பட்டதாகக் கூறப்படும் மாலை, கைவளையல் மற்றும் பெட்டகம், இரண்டு அடி நீளமுள்ள போலி யானைத் தந்தம், யானை முத்துகளால் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இரண்டு கைவளையல்கள், சிறுத்தையின் ஐந்து பற்கள், இரண்டு சிறுத்தை தோல்கள், மூன்று கடல் சிப்பிகள், இரண்டு புள்ளிச் சங்கு ஓடுகள், ஒரு மான் கொம்பு மற்றும் இரண்டு கருப்பு பவளத் துண்டுகள் உள்ளிட்ட பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மாளிகாகந்த மற்றும் பாணந்துறை நீதவான் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கை விமானப்படையினரால் வழங்கப்பட்ட புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், குருநாகல் வனஜீவராசிகள் உதவிப் பணிப்பாளர் அலுவலகம், புலத்கொஹுபிட்டிய மற்றும் அத்திடிய வனஜீவராசிகள் அலுவலகங்கள், ராஜகிரிய பொலிஸ் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.