இலங்கையைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நால்வர் குஜராத் விமான நிலையத்தில் கைது- வீடியோ இணைப்பு-

குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நால்வரை குஜராத் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.

விமான நிலையத்தில் இருந்து கைது செய்யப்பட்ட நான்கு குற்றம் சாட்டப்பட்டவர்களும் இலங்கை குடிமக்கள் மற்றும் இஸ்லாமிய அரசின் தீவிரவாதிகள் என்று பிடிஐ தெரிவித்துள்ளது.

குறிப்பாக இந்தியாவில் ஐஎஸ்ஐ எஸ் அமைப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக வரும் தகவலால் இந்தியா முழுவதும் இருக்கும் விமான நிலையங்கள் துறைமுகங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அகமதாபாத் விமான நிலையத்தில் நான்கு தீவிரவாதிகளை குஜராத் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு பொலிசார் கைது செய்தனர்.

இந்த நான்கு பேரும் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும், பாகிஸ்தானில் இருக்கும் தலைமையகத்தின் கட்டளைக்காக காத்திருந்ததாக, அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இலங்கையைச் சேர்ந்த குறித்த நான்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சென்னை வழியாக அகமதாபாத் விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 8.10 மணியளவில் சென்றிருக்கின்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு பொலிசார் பயணிகளை சோதனை செய்த போது நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்த நிலையில், அவர்களிடம் தீவிரமாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

இது குறித்து குஜராத் தீவிரவாத தடுப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில்

ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய இலங்கையைச் சேர்ந்த 4 பேர் ரயில் அல்லது விமானம் மூலம் மே 18 அல்லது 19 ஆம் தேதி அகமதாபாத்துக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இலங்கையில் இருந்து 4 பேர் விமானம் மூலம் அகமதாபாத் வருவது உறுதி செய்யப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை கொழும்பில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் மூலம் சென்னை வழியாக அகமதாபாத் வந்த 4 பேர் இரவு 8.10 மணியளவில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களின் பெயர் முகமது நுஸ்ரத் (வயது -33) , முகமது நப்ரான் (வயது-35) முகமது பாரிஸ் (வயது -27) மற்றும் முகமது ரஷ்தீன்( வயது -43) என்பது தெரியவந்துள்ளது.

முகமது நுஸ்ரத், முகமது நப்ரான், முகமது பாரிஸ் மற்றும் முகமது ரஷ்தீன் ஆகியோர் பயங்கரவாதிகள் என அடையாளம் காணப்பட்டனர். இந்த 4 பேரும் இலங்கைப் பிரஜைகள் மற்றும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான இஸ்லாமிய அரசின் தீவிர உறுப்பினர்கள். அவர்கள் நான்கு பேரும் ஐஎஸ்ஐஎஸ் சித்தாந்தத்தால் முற்றிலும் தீவிரமயமாக்கப்பட்டவர்கள், இவர்கள் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த வந்துள்ளனர் என்று குஜராத் டிஜிபி விகாஷ் சஹாய் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

இவர்கள் இந்தியாவில் எங்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர்? அவர்களுக்கு ஆயுதங்கள் எங்கிருந்து கிடைக்கும்? ஏற்கனவே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தியாவில் எங்கு எங்கு இருக்கிறார்கள்? என்பது குறித்தும் அவர்களிடமிருந்து தகவல் பெற தீவிரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்