அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக இரத்தினபுரியிலுள்ள பிரபல சுற்றுலா விடுதி ஒன்றுக்கும், மூன்று வர்த்தக நிலையங்களுக்கும் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
இரத்தினபுரியிலுள்ள பிரபல சுற்றுலா விடுதி ஒன்றில் நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட போத்தல் குடிநீர் அதன் பொதியில் அச்சிடப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் குறித்த விடுதிக்கு 5 இலட்சம் ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேவேளை, குருவிட்ட, பரகடுவ மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் உள்ள மூன்று வர்த்தக நிலையங்கள், உள்நாட்டு கீரி சம்பா மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசியை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமைக்காக தண்டிக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தில் தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட வர்த்தகர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
அத்துடன், பொருட்களை கொள்வனவு செய்வதற்கு முன்னர் அவற்றின் பொதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை சரிபார்த்து வாங்குமாறும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக பணத்தைச் செலுத்த வேண்டாம் என்றும் அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பான முறைப்பாடுகளை நுகர்வோர் விவகார அதிகார சபையின் 1977 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கு அலுவலக நேரங்களில் தொடர்பு கொண்டு வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.