முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்காக பணத்தைப் பெற்றுக்கொண்டு பிணை நின்ற இருவரை இணைப்பதற்கு, இடைத்தரகராகச் செயற்பட்டதாகக் கூறப்படும் 76 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கெசல்வத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான ஏர்பஸ் விமான ஒப்பந்தம் குறித்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவுக்கு, பொய்யாகப் பிணை நிற்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கடந்த மே 07 ஆம் திகதி இரண்டு சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி, சந்தேக நபர்கள் இருவரும் தலா 15,000 பெற்றுக் கொண்டு பிணைதாரர்களாக நீதிமன்றில் முன்னிலையானதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் பொலிஸ் விசாரணையில், சந்தேக நபர்களுக்கு நிரந்தர வேலை அல்லது நிலையான வருமான ஆதாரம் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
சந்தேக நபர்களுக்கு கபில சந்திரசேனவை தனிப்பட்ட முறையில் தெரியாது என்றும், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது, சந்தேக நபர்களை மே 13 வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிபதி உத்தரவிட்டதோடு, பிணை மனுவிற்காக கிராம அலுவலர் சான்றிதழ்கள் எவ்வாறு பெறப்பட்டன என்பது குறித்து விசாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் பிரகாரம் இன்று சந்தேகநபர் ஒருவர் கெசல்வத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.