500,000 கடனட்டைகளை திருடி மோசடி செய்த 18 வயது இளைஞன்

18 வயதுடைய இளைஞரொருவர் 5.5 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான பல பொருட்களை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் 500,000 கடனட்டை பயனர்களின் தகவல்களை திருடி சட்டவிரோதமாக சேமித்து அதன்மூலம் பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.

இலங்கை பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 4 ஆம் திகதி ஆன்லைன் சில்லறை விற்பனை நிலையமொன்றினால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து அவர் கடந்த வியாழக்கிழமை தும்மலசூரியவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி கடனட்டை வைத்திருப்பவர்களின் விவரங்களை சட்டவிரோதமாக சேமித்து வைத்து இந்த மோசடியை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரின் கணனியை பரிசோதித்ததில், அவர் 500,000 கடனட்டை பயன்படுத்துபவர்களின் தகவல்களை சட்டவிரோதமாக சேமித்து வைத்திருந்ததாகவும், அந்த தரவுகளை ஆன்லைனில் பல்வேறு பொருட்களை வாங்குவதற்கு பயன்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் கடனட்டை தரவுகளைப் பயன்படுத்தி கணனிகள், கமராக்கள், உணவு, மதுபானம் உள்ளிட்ட பல பொருட்களை அவ்வப்போது கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் பல்வேறு பகுதிகளில் இருந்து கொள்வனவுகளை மேற்கொண்டுள்ளதுடன் பொருட்களை விநியோகிப்பதற்கும் வெவ்வேறு இடங்களை தெரிவு செய்துள்ளார்.

சந்தேக நபர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து ஒப்பந்தத் தொழிலாளியாக கடமையாற்றி வரும் நிலையில், கைத்தொலைபேசியை பயன்படுத்தி இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபருடன் தொடர்புடைய ஏனைய நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.