பாடசாலைக்குச் செல்லாத சிறுவர்களைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டியுள்ளது: அனிஸ்டன் ராஜலிங்கம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

“ஒரு பிள்ளை 2 மாதங்கள் பாடசாலைக் கல்விக்குச் செல்லவில்லை என்றால், அது பெற்றோரும் சமூகமும் அக்கறை எடுக்க வேண்டிய பாரதூரமான விடயம். அப்படிப்பட்ட ஒரு பிள்ளை பாடசாலைக் கல்வி இல்லாமலேயே இந்த சமூகத்திற்குள் இருந்து எப்படி எதிர்காலத்தில் இந்த சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தப்போகிறது என்பது பெரிய கேள்வியாகும்” இவ்வாறு ஆசிய மன்றத்தின் திட்ட அலுவலர் அனிஸ்டன் ராஜலிங்கம் தெரிவித்தார்.

“பயனுறுதிமிக்க மக்கள் பங்களிப்பின் ஊடாக உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபன திணைக்கள சேவைகளில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக் கூறலையும் மேம்படுத்தல்” எனும் செயற்திட்டத்தின் மீளாய்வுக் கூட்டம் மூதூர் பிரதேச செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

ஆசிய மன்றம் நிறுவனத்தின் அனுசரணையில் இளைஞர் அபிவிருத்தி அகம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அமுலாக்கத்தோடு மூதூர் பிரதேச செயலகத்தின் ஒழுங்குபடுத்தலில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மூதூர் பிரதேச சபைச் செயலாளர் எஸ். சத்தியசோதி, மூதூர் பொலிஸ் பெருங்குற்றவியல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி ரூபசிங்ஹ, சமூர்த்தி தலைமையக முகாமையாளர் வி. கோடீஸ்வரி உள்ளிட்டோரும் ஆசிய மன்றம் நிறுவனத்தின் பிரதிநிதி தபேந்திர செனவிரெட்ன, இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் ரீ. திலீப்குமார் உள்ளிட்ட இன்னும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்

தொடர்ந்து அங்கு உரையாற்றிய ஆசிய மன்றப் பிரதிநிதி ராஜலிங்கம், “பாடசாலை செல்லாத சிறுவர்களைப்பற்றி அதிக அக்கறை கொள்ள வேண்டியுள்ளது. போதைப் பொருளுக்கு அடிமையாதலால் ஏற்படும் சமூகப் பாதிப்புக்கள் பற்றி அக்கறை கொள்ள வேண்டும். ஓரங்கட்டப்பட்ட சமூகத்தவர்பற்றிய கரிசனையும் வேண்டும். இவ்வாறு சமூக மட்டத்தில் எதிர்நோக்கும் சவால்கள் பிரச்சினைகளுக்கு சமூகமும் சேவையாளர்களும் எவ்வாறு பதிலிறுக்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் ஆசிய மன்றத்தின் பிரதேச அபிவிருத்திச் செயற்பாடுகள் அமையும். அதேவேளை இளைஞர் அபிவிருத்தி அகம் தன்னார்வ அமைப்புடன் தொடர்ந்து பணியாற்ற ஆசிய மன்றம் உத்தேசிக்கிறது” என்றார்.

நிகழ்வில் அரச நிருவாகம், கூட்டுத்தாபன திணைக்களங்கள், உள்ளுராட்சி மன்றங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்படும் சேவைகள் அவற்றைப் பொதுமக்கள் பெற்றுக் கொள்வதற்கான இலகு வழிமுறைகள் பற்றிய தெளிவுகள் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளால் வழங்கப்பட்டன. அத்துடன் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அவற்றுக்கான தீர்வுகளை அணுகும் வழிமுறைகள் பற்றி சிவில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளால் சபையில் முன்வைக்கப்பட்டது. அவற்றுக்கான சாத்திமான தீர்வுகளையும் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் முன்வைத்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்