மட்டக்களப்பில் பெண் ஊடகவியலாளர் மீது பிக்கு தாக்குதல் முயற்சி! -வீடியோ இணைப்பு-

மட்டக்களப்பில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையிலான பிக்குகள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தில் பெண் ஊடகவியலாளர் மீது பிக்கு ஒருவர் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று சனிக்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம் தேற்கொண்டுள்ள நிலையில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் உள்ளிட்ட பிக்குகள் மட்டக்களப்பு காந்தி பூங்கா மற்றும் புனித மிக்கேல் கல்லூரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்

இதன்போது அம்பிட்டிய சுமனரத்ன தேரர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனை தகாத வார்த்தைகளால் வசைபாடியதுடன் மின்னல் 24 செய்திகள் இணையத்தளத்தின் பெண் ஊடகவியலாளரை தாக்க முயன்றுள்ளார்.

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களுக்கு எதிராக அப்பகுதியில் பயிர்செய்கையை முன்னெடுத்துள்ள பெரும்பான்மையின மக்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு பண்ணையாளர்கள் தொடர் போராட்டததை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.

இரா சாணக்கியனின் செயற்பாடுகள் தொடர்பில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கடுமையாக விமர்சித்துள்ளதுடன் அவ்விடத்தில் செய்தி சேகரிக்க சென்ற மின்னல்24செய்திகள் இணையத்தளத்தின் பெண் ஊடகவியலாளரை ‘நீ சாணக்கியனின் ஆள் தானே என்று குறிப்பிட்டு தாக்க முற்பட்டுள்ளார். இதன்போது ஏனைய ஊடகவியலாளர்கள் இதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.