கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் ஆக்ரா ஓயாவில் காணாமல் போயிருந்த மாணவன் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ள மாணவன் லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மிளகுசேனை தோட்டத்தைச் சேர்ந்த பரமநாதன் கிஷோர் (வயது 15) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை நண்பகல் சுமார் 12.30 மணியளவில், பாடசாலையில் நடைபெற்ற பரீட்சையை எழுதி முடித்த 10 மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேறி, ஓல்ரிம் பகுதியின் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் ஆக்ரா ஓயாவில் நீராடச் சென்றுள்ளனர்.
இதன்போது, குறித்த மாணவன் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்டு நீரில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் கடற்படை பிரிவின் நுவரெலியா பிரிவினரும் பிரதேசவாசிகளும் இணைந்து காணாமல் போன சிறுவனைத் தேடும் பணிகளில் நேற்றும் இன்றும் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
லிந்துலை திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தைப் பார்வையிட்டதன் பின்னர் மேற்படி சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .