மட்டக்களப்பு நகர் பகுதியில், நேற்று வியாழக்கிழமை இரவு, 16 வயது சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டியில் கடத்திச் செல்ல முற்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எனினும், சிறுமியின் தந்தை விரைந்து செயற்பட்டதால், சந்தேகநபர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுமியை, அவரது தந்தை நேற்று இரவு மேலதிக வகுப்புக்காக மட்டக்களப்பு நகருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
எனினும், மழை காரணமாக வகுப்பு நடைபெறாது என அறிவிக்கப்பட்டதையடுத்து, சிறுமியை அருகிலிருக்கும் உறவினர் வீட்டுக்கு செல்லுமாறு கூறி விட்டு தந்தை கடைக்கு சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில், குறித்த சிறுமி இன்னும் தங்கள் வீட்டிற்கு வரவில்லை என உறவினர் தரப்பிலிருந்து சிறுமியின் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதிர்ச்சியடைந்த தந்தை உடனே தனது மகளை தேடி சென்றுள்ளார்.
அப்போது அங்கு நின்றிருந்த முச்சக்கரவண்டி ஒன்று அவரைக் கண்டதும் வேகமாகத் தப்பிச் செல்ல முயன்றுள்ளது.
சந்தேகமடைந்த சிறுமியின் தந்தை, முச்சக்கரவண்டியை பின்தொடர்ந்து சென்று அதை மடக்கிப் பிடித்துள்ளார்.
சிறுமியின் தந்தை முச்சக்கரவண்டியை மறித்ததும், அதனைச் செலுத்திய இளைஞன் முச்சக்கரவண்டியை கைவிட்டு தப்பியோடியுள்ளார்.
முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் தனது மகள் மயக்கமடைந்த நிலையில் கிடப்பதைக் கண்ட தந்தை, உடனடியாக அவரை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளார்.
இதற்கிடையில், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியை மீட்க வந்த மற்றொரு இளைஞன், அங்கிருந்த பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், தப்பியோடிய சந்தேகநபரான சிறுமியை கடத்த முயன்ற இளைஞரை இரவு 11.00 மணியளவில் பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் மட்டக்களப்பு நகர் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரின் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.