ஏ.டி.எம் இயந்திரத்தில் 10 மில்லியனுக்கும் அதிகமான பணம் மோசடி: நால்வர் கைது

காலியில் உள்ள வங்கி தன்இயங்கி (ஏ.டி.எம்) இயந்திரத்தை ஊடுருவி பணத்தை திருடிய குற்றச்சாட்டில் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பல்கேரிய பிரஜைகளும் அடங்குவதுடன், இலங்கை காவல்துறையின் கணினி குற்றப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு ஹெவ்லொக் பகுதியில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இவர்கள் கல்கிசை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல்கேரிய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார், மற்றையவர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டார்.

இரண்டாவது பல்கேரிய நாட்டவர் கொள்ளைச் சம்பவங்களின் பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டதோடு, அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

குற்றங்களைச் செய்ய பயன்படுத்திய வாகனத்தின் சாரதியையும் பிடிகல பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

சந்தேக நபர் பத்தேகம ஏடிஎம் இயந்திரங்களிலிருந்து 5.7 மில்லியன், ஹிக்கடுவையில் உள்ள ஏடிஎம்களில் இருந்து 4.8 மில்லியன் மற்றும் 250,000 இலட்சம் கராப்பிட்டியவிலுள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்தும் மோசடி செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.